கோவையிலிருந்து அந்தியூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகரைப்புதூர் என்ற இடத்தில் சென்றபோது இந்த பேருந்தும், கவுந்தப்பாடியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் 2 பேருந்துகளின் முன் பகுதியும் நொறுங்கி சேதம் அடைந்தது.
மேலும் பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி கோவை-அந்தியூர் டிரைவர் ஆலாம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன், கவுந்தப்பாடி-கோபி பேருந்து டிரைவர் ராஜசேகர், பயணிகள் கவிதா, ரேவதி, பிரதீபா உட்பட 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அதன்பின் இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.