அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகங்களில் மாதம்தோறும் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம் இதில் மிக முக்கியமான முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது , பல்வேறு முக்கிய முடிவுகளை சிண்டிகேட் கூட்டத்தில் எடுப்பது போன்ற முக்கிய விவகாரங்களை ஆலோசித்து மேற்கொள்வது வழக்கமாகும்.
அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்முறையாக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.
சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் கூட்டத்திலேயே அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. சிண்டிகேட் குழு கூட்டத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா ,தனியார் கல்லூரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் சின்னதுரை மலர்விழி , கிசோர் உள்ளிட்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற சிண்டிகேட் குழு கூட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது, புதிய விரிவுரையாளர் பணியிடங்களை ஏற்படுத்துவது தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.