அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது. கூடுதல் விலைக்கு தான் விற்போம் என திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் ஊழியர்கள் அடாவடி செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் அரசின் உத்தரவை மீறி மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதுகுளத்தூர் எல்லைக்குள்பட்ட திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. எனினும் அரசு நிர்ணயித்த விலைதான் கொடுப்பேன். அரசாங்கம் சொல்லி இருக்கிறது என்று குடிமகன் ஒருவர் கேட்டுள்ளார்.
அப்போது அதற்கு அந்த கடை பணியாளர் அடாவடியாக பேசி அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு சக ஊழியரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அரசின் உத்தரவை பின்பற்ற தவறிய டாஸ்மாக் ஊழியர்களான சோலைராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மதுபானங்கள்
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ 10 முதல் ரூ 500 வரை உயர்த்தப்பட்டது. இந்த டாஸ்மாக் மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. கொரோனாவால் கடைகள் மூடப்பட்டிருந்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.