நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் வருகிற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுளள்ளது. தேர்தலுக்கு ஆயத்தமாக 29.09.2021 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக நாளை (அக்.29) அனைத்து வகை பள்ளிகளுக்கும் (CBSE பள்ளிகள் நீங்கலாக) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல உள்ளதால், நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.