இந்த உள்ளாட்சித் தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை என்ற பெயரில் கடந்த 23ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிச்சாமி இத்தனை தீவிரமாக செயல்படும் நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எங்கேயும் எட்டிப்பார்க்கவில்லை. அவர் ஒதுங்கி இருக்கிறாரா? அல்லது ஒதுக்கப்பட்டாரா? என்பதுதான் கட்சியின் பேச்சாக இருக்கிறது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு கடும் அரசியல் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி ஆசை. அதற்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், ஆரம்பம் முதலே என்னவோ பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப இழப்பு காரணமாக அவரை அழைக்கவும் எடப்பாடி விரும்பவில்லை. அதனால் தான் பாஜகவுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டியது குறித்து இரகசிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டங்களில் கலந்து கொண்டால் ஒரு சிலருக்காவது பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால் ஒட்டுமொத்தமாக அவர் கண்டுகொள்ளவில்லை.
அதேநேரம் தென்மாவட்டங்களுக்கு எடப்பாடிபழனிசாமி செல்லும்போது நிச்சயம் தன்னையும் அழைத்துச் செல்வார் என்று தான் பன்னீர் நம்பினார். அதற்காக ஈபி.எஸிடம் முன்னாள் அமைச்சர் ஒருவரை தூது அனுப்பினார். அவரிடம் பன்னீருக்கு ஒரேடியாக நோ சொல்லிவிட்டார் எடப்பாடி. அதாவது இன்றைய நிலையில் அண்ணனுக்கு ஓய்வு தான் முக்கியம். அதனால் அவர் அமைதியாக இருக்கட்டும். தேர்தல் வேலைகளையும், பணப்பட்டுவாடா போன்றவற்றை நானே பார்த்துக்கொள்கிறேன், வெற்றி, தோல்வி பற்றி அவர் கவலைப்பட வேண்டாம், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நமது கட்சிக்கு தோல்விகள் கிடைத்திருக்கிறது என்று தடுத்து நிறுத்தி விட்டாராம்,
அதாவது எது நடந்தாலும் அது தன்னுடைய தலைமைக்கு கிடைத்ததாக இருக்க வேண்டும். இதில் யாரும் பங்கு கேட்க கூடாது என்பதில் எடப்பாடிபழனிசாமி மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்”’ எடப்பாடி தரப்பினர்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிடம் விசாரித்தபோது, ”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போதே எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டதன் காரணமாகத்தான் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியைப் பறிகொடுத்தது. அப்போது ஓபிஎஸ் தெரிவித்த சில யோசனைகளை எடப்பாடி கேட்டு இருந்தால் நிச்சயம் மூன்றாவது முறை வெற்றி கிடைத்திருக்கும். அதேபோல் இப்போதும் அவர் செயல்படுகிறார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அழைக்கவில்லை.
ஓ.பி.எஸ் மனைவியின் 30ஆம் நாள் காரியத்துக்கு பிறகுதான் வெளியே வருவார் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அவசியம் நேர்ந்தால் கட்சிக்காக எந்த நேரத்திலும் உழைப்பதற்கு தயாராகவே இருக்கிறார். அதனால் தான் உள்ளாட்சி தேர்தல் விஷயமாக தென் மாவட்டத்திற்கு எடப்பாடி வரும்போது நிச்சயம் தனக்கு அழைப்பு வரும் என்று நம்பி இருந்தார். ஆனால், அழைப்பு வரவில்லை என்றதும் முன்னாள் அமைச்சர் மூலம் தூது அனுப்பவும் செய்தார். ஆனால், ஏற்கனவே எடப்பாடியின் பயணம் திட்டமிடப்பட்டு விட்டது. நீங்கள் வேண்டுமானால் தனியே பயணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் கடும் அப்செட் ஆகி சட்டமன்ற தேர்தல் போலவே இப்போதும் தப்பு தப்பாக முடிவெடுத்து வருகிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் தோல்வியை சந்திக்கும். அப்போதுதான் தலைமையை அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்கவில்லை என்பதை உணர்வார்கள்”என்று கூறுகின்றனர்