தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அங்குள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் திடீரென நுழைந்து ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரின் அதிரடி ஆய்வு நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திமுக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அதிரடியாக தமிழக காவல்துறை களத்தில் இறங்கி குற்ற வழக்கில் தொடர்புடைய கைதிகளை கண்காணித்து, அவர்கள் பதுக்கிவைத்துள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, ரவுடிகளை கைதுசெய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றது.
காவல்துறை என்பது தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இனி கொலை, கொள்ளை போன்ற எந்த சம்பவங்களும் நடைபெற கூடாது என அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறை இந்த அதிரடி ஆபரேஷனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பின்னர் அங்கிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டார்.
தொப்பூர் வழியாக தருமபுரி சென்ற அவர் வரும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் உள்ளே திடீரென நுழைந்தார், பின்னர் காவல் நிலையத்தில் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு விசாரணை குறித்து கேட்டறிந்த அவர், அதற்கான கோப்புகளை ஆய்வு செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த காவலர்கள் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.அவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார், அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்,இந்த ஆய்வின்போது ஐஜி சுதாகர், ஏடிஜிபி தாமரைக்கண்ணன், ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காவல் நிலையத்திற்குள் முதலமைச்சரின் திடீர் விசிட் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக. இம்மாதிரியான ஆய்வுகள் சென்ற காலத்தில் நடந்து இருந்தால் Lockup Death நடந்திருக்காது. தூத்துக்குடியில் 13 அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்ற நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன பழனிசாமிக்கு சொல்லுங்கய்யா, காவல்துறை முதலமைச்சரின் வசம்தான் உள்ளது என்று என பலரும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.