செய்திகள்

‘குடையே எங்கு இருக்கிறாய்’ இன்று முதல் இடி மின்னலுடன் கனமழை

தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றாலும் பல ஊர்களில் பருவமழை கொட்டித்தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விடிய விடிய லேசான மழை பெய்தது.

பட்டுக்கோட்டையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டையில் 8 செமீ மழையும், ஈரோடு மாவட்டத்தில் 7 செமீ மழையும், நாமக்கல், மதுக்கூரில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திருச்சி, திருவாரூர், பேராவூரணியில் தலா 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சோழவந்தான், அருப்புக்கோட்டை, வாடிப்பட்டி, வெம்பாக்கத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், வேலூர் திருத்துறைப்பூண்டியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பிருப்பதாகவும் மேற்கண்ட மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரைக்கும் மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தெற்கு இலங்கை கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சௌராஷ்டிரா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும். அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு பாகிஸ்தான் மக்ரான் கடற்பகுதிகளுக்கு அருகே செல்கிறது. குலாப் புயல் காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று கரையை கடந்து வலுவிழந்த பின் மீண்டும் வலுப்பெற்று அரபிக்கடலில் புயலாகிறது, இதற்கு ஷாகீன் (Shaheen) என்ற கத்தார் நாட்டின் பெயர் சூட்டப்பட உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button