வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.அந்தவகையில் நேற்று (30ம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தது.
அப்போது, திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரும் திருப்பதி என்பவரின் வீட்டில் மின்சார வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக, சுவரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மழையினால் சுவர் ஈரமாக இருந்தால், சுவர் முழுவதும் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தது.
இதை அறியாத திருப்பதி (45) என்பவர் சுவரை பிடித்துள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர் அலறியடித்துள்ளார். அவரை காப்பாற்றச்சென்ற அவரது மகன்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தந்தையை காப்பாற்றச் சென்று உயிரிழந்த இரு மகன்களும் பள்ளி மாணவர்கள் என்பதும், மூத்த மகன் விஜய் கணபதிக்கு 17 வயது என்றும், இளையமகன் சந்தோஷ்குமாருக்கு 15 வயது என்றும் கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட எஸ்பி.ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.