நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனித – வனவிலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை புலி தாக்கியது. இதில் கடுமையான காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கி கொல்லும் அபாயம் இருப்பதால் உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், அந்தப் புலி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சித்து வந்தனர். புலியை பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 7 நாட்களாக வனத்துறையினர் போராடியும், புலி பிடிபடாமல் சுற்றி வருகிறது. புலி நடமாட்டம் காரணமாக தேவன் எஸ்டேட் பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தேவன் எஸ்டேட் பகுதியில் இருந்த அந்த புலி சிங்காரா பகுதிக்கு சென்றது. இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத் துறையிடம் இருந்து தப்பியது.
மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக, கேரள , கர்நாடக, இணைக்கும் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது புலியை சுட்டுக் கொல்லக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
#todaynews #topnews #news #visilmedia #tiger #ஆட்கொல்லிபுலி #செய்திகள்