மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் மட்டுமின்றி, பிற திறன்களையும் கற்றுத்தருவதில் முதன்மையானவர்கள் ஆசிரியர்கள்.
ஆனால், பள்ளி சிறார்கள் பார்வையற்ற ஆசிரியரை கேலி செய்யும் நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே, ஒரு பள்ளியில் பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது, பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் எழுந்துசென்று கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பன்னீர் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் வரலாற்றுப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் சிலர் கேலியான உடல் அசைவை வெளிப்படுத்தி, அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் அதை டிக்-டாக் போல எடிட் செய்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து தலைமையாசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிப்பதாக தெரிவித்தார்.
நற்பண்புகள் தான் ஒருவனை எந்த நிலையிலும் தலைகுனியவிடாது. எந்த இடத்திலும் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட வைக்கும். யாரையும் தைரியமாக சந்திக்கும் துணிவை தரும். எனவே மாணவர்கள் எந்த சூழலிலும் தவறான வழிகளை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது.