பீகார் மாநிலத்தில் பரவிய வித்தியாசமான வதந்தி காரணமாக கடைகளில் பார்லே ஜி பிஸ்கட் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்டில் ஆண்டு தோறும் ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜிதியா பண்டிகையின்போது தாய்மார்கள் 24 மணி நேரம் நோன்பு இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இவ்வாறு நோன்பிருந்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜிதியா பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், இப்பண்டிகை நாளன்று பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தின் சில இடங்களில் வதந்தி ஒன்று பரவியது. “ஆண் குழந்தைகள் ஜிதியா பண்டிகையின் போது பார்லே ஜி பிஸ்கட் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அசம்பாவீதம் ஏற்படும்” என்பது தான் அந்த வதந்தி. இதையெல்லாம் யாராவது நம்புவார்களா என நமக்கு சந்தேகம் எழலாம். ஆனால், பீகார் மக்கள் நம்பினார்கள்.
வதந்தி காட்டுத் தீ போல வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், வாய்வழியாகவும் பரவியது. தங்கள் குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவீதம் ஆகிவிடுமோ என அஞ்சிய மக்கள் பார்லே ஜி பிஸ்கட் வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.
இதனால் பெரும்பாலான மளிகை கடைகளில் பார்லே ஜி பிஸ்கட் வாங்க கூட்டம் அலை மோதியது. பல கடைகளில் பார்லே ஜி பிஸ்கட் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விசயம் அறிந்த கடைக்காரர்கள் உஷாராகினர். சீதாமார்ஹி மாவட்டத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி 5 ரூபாய் பார்லே ஜி பிஸ்கட்டை 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தனர்.
பல வியாபாரிகள், பார்லே ஜி பிஸ்கட்டை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்கத் தொடங்கினர். இதனால் கடைகளின் அலமாரிகள் காலியாகின. குறிப்பாக சீதாமார்ஹி மாவட்டத்தின் கிராமபுற பகுதிகளான பர்கானியா, தேஹ், நான்பூர், பாஜ்பட்டி, மேஜர்கஞ் உள்ளிட்ட பல இடங்களில் இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தெரிவித்து உள்ள சிதாமர்ஹி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர் கிஷோர் ராய், “மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த வதந்தி கடந்த வியாழக் கிழமை அன்று பரவத் தொடங்கியது. ஆனால், இந்த வதந்தி மாவட்டம் முழுவதும் எப்படி பரவியது என்பது குறித்து கண்டறியவில்லை. விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார்.
பொதுவாக வதந்தி பரவினால் பலரது தொழில்கள் பாதிக்கப்படுவதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், பீகாரில் பரவிய பார்லே ஜீ விற்பனையை சக்கைபோடு போட வைத்து இருக்கிறது.
#visilmedia #todaynewstamil #topnews #parleG #Bihar