அரசியல்செய்திகள்

உத்தரவிடுங்கள், உங்களுக்காக உழைப்போம்..! முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் இதன் மூலம் தங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி வருவதாகவும் நெஞ்சுயர்த்தி பேசியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இதனைக் கூறியிருக்கிறார்.

அவரது பேச்சின் முழு விவரம் பின்வருமாறு;

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்கள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நம்முடைய கூட்டணிக் கட்சியினருக்கும் உங்களது பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ‘உத்தரவிடுங்கள் – உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கிறோம்’ என்று நாட்டு மக்களிடம் நாங்கள் வாக்குக் கேட்டோம்.

இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள் என்று எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்களும் உங்கள் வாக்குகளை வழங்கினீர்கள்.

உங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட நான் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டேன். பொறுப்பேற்றது முதல் இன்று வரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். தேர்தலுக்கு முன்னால் என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தேனோ அந்த வாக்குறுதிகளைத் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

* பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயண வசதியைச் செய்துள்ளோம்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம்.

* பதினான்கு வகையான மளிகைப் பொருள்கள் கொடுத்துள்ளோம்.

* ஆவின் பால்விலையை மூன்று ரூபாய் குறைத்துள்ளோம்.

* பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கான தனியாக நிதி நிலை அறிக்கையை வெளியிட்டோம்.

* கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் இரத்து செய்துள்ளோம்.

* தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

* ஊரகப் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டு வந்திருக்கிறோம்.

* கிராமப் பகுதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தை புதுப்பிக்க இருக்கிறோம்.

* கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் தொடங்கிவிட்டோம்.

* மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள். பொங்கலுக்குள் ஒரு கோடிப் பேருக்கு சிகிச்சை அளித்திருப்போம்.

* கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், காவலர் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

* குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு பதினைந்து நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவு போட்டுள்ளோம்.

* மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக இணைப்பு தரப்போகிறோம். மற்றவர்களுக்கும் விரைவில் வழங்குவோம்.

* மகளிர் அரசு ஊழியருக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிக்க தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

* சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் வந்த போது என்னிடம் நீங்கள் கொடுத்த மனுக்களில் பெரும்பான்மையான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

– இவை அனைத்தையும் செய்து கொடுத்துள்ளோம் என்பதை தலைநிமிர்ந்து சொல்ல நான் விரும்புகிறேன்.

அதுமட்டுல்ல, ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் செய்து கொடுத்துள்ளோம் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்தன்மை ஆகும்.

பத்தாண்டு காலம் ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அவர்கள் இரண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பத்து ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 505-இல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே தி.மு.க. அரசாக மட்டும்தான் இருக்க முடியும்.

இத்தகைய விவேகமும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது நான் வரிசைப்படுத்தியதைப் போல் ஏராளமான திட்டங்களை வரிசையாகக் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் ஆகும். எவ்வளவு பெரிய சிறந்த திட்டங்களை நாங்கள் தீட்டினாலும் அவை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்களை வந்து சேரும். தடங்கலோ தடையோ இல்லாமல் அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்று சேருவதற்கு வழிவகை ஏற்படுத்தித் தருவதாக உங்களது வாக்குகள் அமைய வேண்டும்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைவதற்கான வாக்குகளாக உங்கள் வாக்குகள் அமைய வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கும் அவரவர்களுக்கான சின்னங்களில் வாக்களித்து தமிழகத்தில் அமைந்துள்ள நல்லாட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களுக்காகவே செயல்படுகிறோம். மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம்.

உங்களில் ஒருவனாக – உங்கள் சகோதரனாக – கலைஞரின் மகனாக – கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #tamilnadu #mkstalin #election #உள்ளாட்சிதேர்தல் #செய்திகள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button