தூத்துக்குடி தூத்துக்குடியில் அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் – நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஓட்டுனர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே இடைநில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று மாலை திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி புறப்பட்ட இடைநில்லா அரசுப் பேருந்து ஒன்றை தூத்துக்குடியைச் சேர்ந்த ஓட்டுனர் கனியரசன் என்பவர் ஓட்டினார். இந்த வழியில் நெல்லை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை அருகே நடைபெற்று வரும் பாலம் வேலை காரணமாக துணை சாலையில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து புதுக்கோட்டை துணைச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்துக்கு பின்னே காரில் குடும்பத்துடன் வந்த கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர், முந்தி சென்று பேருந்தை வழிமறித்ததாக தெரிகிறது. தொடர்ந்து காரிலிருந்து இறங்கி வந்த அவர், பேருந்து ஓட்டுனர் கனியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்தும் தூத்துக்குடி வரை இருவரும் ஒருவருக்கொருவர் வழிவிட மறுத்து வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். இவ்வாறு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை பேருந்து வந்தடைந்ததும் காரில் வந்த வழக்கறிஞர் தன் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர் கனியரசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த மற்ற பணியாளர்கள், பணியிலிருந்த அரசு ஓட்டுனர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வரை பணியில் ஈடுபட மாட்டோம் எனக்கூறி அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கமறுத்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-நெல்லை தமிழ்ச்சாலையில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. நெடுந்தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் பயணிகள் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #thoothukudi #tamilnadu #lawyers #செய்திகள் #தமிழ்நாடு #தூத்துக்குடி #வழக்கறிஞர்கள் #ஓட்டுனர்கள்