சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கட்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அவர்களில் மூத்த மகன் வண்ண தமிழ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளான். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போது புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
அதன்பின் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். கடந்த சில தினங்களாக சரிவர சாப்பிடாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் கழிக்கும் நிலை ஏற்பட்டது.
அதனால் கவலையடைந்த பெரியசாமி, உள்ளூர் மருத்துவ பணியாளர் ஒருவரை அழைத்து வந்து ஊசி போட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்தான். இதனையறிந்த அப்பகுதி மக்கள், சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக பேச தொடங்கினர். அது பற்றிய தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் கிராம நிர்வாக அலுவலர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் தந்தை பெரியசாமியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் இதுகுறித்து பெரியசாமி அளித்த வாக்குமூலத்தில்,
“எனது மகன் உயிருக்கு போராடுவதை என்னால் தாங்க முடியாததால் வேறுவழியின்றி பிரபுவை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறினேன். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று முன்தினம் இரவு பிரபு எனது வீட்டிற்கு வந்து உயிருக்கு போராடிய வண்ணத்தமிழ்க்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தார்” என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெரியசாமி,வெங்கடேசன், பிரபு ஆகிய மூவர் மீதும் கொலை மற்றும் கொலை செய்ய உடந்தையாக இருந்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எடப்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மாலதி மூவரையும் 15 நாள் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து மூவரையும் காவல் துறையினர் ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #crime