மாலையில் மாட்டை தேடிச்சென்ற தம்பதியை காலையில் தேடிச்சென்ற ஊரார் அதிர்ச்சி அடைந்தனர். தம்பதியர் இருவரும் சடலமாக கிடக்க அவர்களுக்கு அருகே பசுமாடும் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகே இருக்கும் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாசம். இவரது மனைவி அஸ்வினி . கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.
மேய்ச்சலுக்கு சென்ற மாடு வீடு திரும்பவில்லை என்று நேற்று மாலையில் கணவன்- மனைவி இருவரும் பசு மாட்டைத் தேடிக் கொண்டு தங்கள் நிலப்பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். இரவு நெடுநேரமாகியும் கணவன் மனைவி இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லையே என்று பரிதவித்தவர்கள் பொழுது விடிந்ததும் இருவரையும் தேடிக்கொண்டு வயல்வெளிக்கு சென்றனர்.
அங்கே ஜெயப்பிரகாசமும் அஸ்வினியும் சடலமாக கிடந்தனர். அவர்களுக்கு அருகே பசுமாடும் சடலமாக கிடந்தது. அப்போதுதான் வேட்டைக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடும் தம்பதியினரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து திருவலம் போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் அப்பகுதிக்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மணிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மின் வேலி அமைத்தது குறித்த விசாரணையில் நிலத்தின் உரிமையாளர் விஜயகுமாரிடம் விசாரித்தபோது அவர் நிலத்துக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது என்று சொல்ல, தொடர் விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் சிக்கினார்.
பன்றி வேட்டைக்காக விஜயகுமாரின் நிலத்தின் வழியாக செல்லும் மின் கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரத்தை திருடி மின் வேலி அமைத்ததை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
பன்றி வேட்டைக்காக ஒரு இளைஞர் செய்த செயலால் கணவன்-மனைவி பசுமாடு மூன்று பேரும் பலியான பரிதாபம் நிகழ்ந்தது அக்கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #tamilnadu #சிறப்புசெய்திகள் #செய்திகள்