கோவில் பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே அனிச்சக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபடுவதில் இரு தரப்பினரிடையே இடையே பிரச்சனை இருந்துவருகிறது.
இந்த நிலையில், பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள காளியம்மன் கோவிலுக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் வழிபடச் சென்றபோது ஆலயத்தில் துரைராஜ் என்பவர் கோயில் பூஜை செய்து திருநீரை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்த மலைராஜ் என்பவர், துரைராஜ்-யிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து அறிந்த ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்த சென்றுள்ளார். இதையடுத்து மலைராஜை விசாரித்துக் கொண்டிருந்தபோது சார்பு ஆய்வாளருக்கும், மலைராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மலைராஜ் திடீரென அரிவாளால் சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வன் தலையில் வெட்டினார், இதில் அவருக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சார்பு ஆய்வாளரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய மதுபோதையில் இருந்த மலைராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #ராமநாதபுரம் #தமிழ்நாடு #அரிவாள்வெட்டு