சர்க்கார் படத்தில் வருவது போல தனது ஓட்டை யாரோ போட்டுவிட்டதை விட்டு விட்டு செல்லாமல் கைக் குழந்தையுடன் போராடி தனது ஓட்டை போட்ட பார்வதி என்பவரை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் வார்டு வரையறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை இரு கட்டங்களாக நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அந்த வகையில் நேற்றைய தினம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அக்டோபர் 9-ஆம் தேதி இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெற்றது.
முதற்கட்ட தேர்தல்
முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் தனது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்துவிட்ட நிலையில் கடுமையாக போராடி தனக்கான வாக்கை பதிவு செய்த ஒரு பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உத்தரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சிங்காடிவாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பார்வதி (30). இவர் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குமரவேலை திருமணம் செய்து கொண்டு அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு 6 மாத கைக் குழந்தையுடன் உள்ளது.
பார்வதி தனது வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த ஊரான சிங்காடிவாக்கத்தில் இருந்து உத்தரமேரூக்கு மாற்றாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலால் சிங்காடிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக கைக் குழந்தையுடன் சென்றார். இவர் வாக்களிக்க சென்ற போது இவரது வாக்கை வேறு யாரோ கள்ளத்தனமாக செலுத்திவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வாக்குப் பதிவு மைய அலுவலரிடமும் , வேட்பாளர்களின் முகவர்களிடமும் வாக்குவாதத்தில் பார்வதி ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் தெரிவித்தார். வாக்குப் பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் 49 பி படிவத்தை பார்வதிக்கு வழங்கி சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர். கள்ள ஓட்டு போட்ட பிறகு தனது ஓட்டை விட்டுவிட்டு செல்லாமல் கைக் குழந்தையுடன் போராடி தனது ஜனநாயக கடமையாற்றிய பார்வதியை அனைவரும் பாராட்டினர். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்யின் வாக்கை யோகி பாபு செலுத்திவிட அவரும் போராடி தனது சேலஞ்ச் வாக்கை அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
#visilmedia #todaynewstamil #topnews #bignews #tamilnadu #localelection #உள்ளாட்சிதேர்தல் #சர்க்கார் #விஜய்