பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்து சென்னை திரும்பியதும் அதிமுக நிர்வாகிகள், முக்கிய அமைச்சர்கள் சசிகலா பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக சென்னை வந்த சசிகலாவுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவிர அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என அந்த பயணத்தில் சொன்னவர், அடுத்த சில வாரங்களில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இதனிடையே, அதிமுக தொண்டர்களிடையே சசிகலா பேசும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது அக்கட்சியின் தற்போதைய இரட்டை தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தொண்டர்களிடம் பேசிய சசிகலா, விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியிருந்தார். சசிகலாவுடன் செல்போனில் பேசியவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் சசிகலா, தொண்டர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
இதனிடையே, கட்சியில் முக்கியத்துவம் இல்லாததாலும், ஈபிஎஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் கட்சி முழுவதையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாலும், சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர ஓபிஎஸ்
முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரும் அண்மையில் டெல்லி சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சசிகலா இணைப்பு பற்றி பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், டெல்லி பயணத்துக்கு பின்னர் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு ஓபிஎஸ் வந்து விட்டது போன்று அவரது கருத்துகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இதுஒருபுறமிருக்க சசிகலா இதுவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியது. முந்தைய அதிமுக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினாலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு தளர்வுகளை பொறுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக சசிகலா தெரிவித்தார். ஆனால், இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, சசிகலா மீது ஏற்கனவே இருக்கும் வழக்குகள் தூசு தட்டப்பட்டு வருகின்றன. சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சசிகலாவை அரசியலுக்குள் வராமல் பார்த்துக் கொள்வதற்காக செய்யப்படுகின்றன என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அக்கட்சி பொன் விழாவை சிறப்பாக கொண்டாடவுள்ளது. வருகிற 17ம் தேதி பொன்விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதற்கிடையே, வருகிற 16ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுநாள், எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #sasikala #tamilnadu #ADMK #சசிகலா #தமிழ்நாடு #அதிமுக