புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதே நோய் தாக்கிய நபரை அதிலிருந்து மீட்பதன் முதல் படி. முதல் நிலை, இரண்டாம் நிலை என புற்றுநோயை 4 நிலைகளாக வகைப்படுத்துகின்றனர். இதில் முதல் நிலையிலேயே நோயைக் கண்டறிந்து விட்டால் அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள் ஆனால், பெரும்பாலான நோயாளிகள் நோய் முற்றிய 4 ஆம் நிலையிலேயே சிகிச்சைக்கு வருவதாக கூறுகிறார் புற்றுநோய் நிபுணர் கிரிதரன்.
புற்றுநோய்கள் பல வகைப்படும் என்பதால் அதன் அறிகுறிகளும் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் வேறுபடுகிறது. வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவருக்கு பல் விழுதல், பல் துலக்குகையில் ரத்தக் கசிவு, வாயில் கட்டிகள் தென்படுதல் அறிகுறிகளாகும். நுரையீரல் புற்றுநோய் இருப்பவருக்கு தொடர் இருமல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருக்கலாம். இதேபோல், வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளாக பசியின்மை உள்ளிட்டவையும், எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளாக கை, கால்களில் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகளும் ஏற்படலாம் என்கிறார் புற்றுநோய் நிபுணர்.
வலியோடு இருப்பதோ, வலி இல்லாததோ எது வேண்டுமானாலும் புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எனவே கட்டிகளை பரிசோதித்து புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதும், எந்தப் புற்றுநோய்க்கும் பொதுவான அறிகுறியான “எடை குறைதல்” ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்துவிடக் கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.