அரசியல்

காவல் நிலையத்தில் தரையில் ஒரே ஒரு போர்வையை வைத்து தூங்கிய பொன்.ராதகிருஷ்ணன் !! புகைப்படம் வைரல்!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆவாரைகுளம் கிராமம், நெல்லை எம்.பி-யான ஞானதிரவியத்தின் சொந்த ஊர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அதனால் அதிருப்தி அடைந்த ஞானதிரவியம் எம்.பி-யும் அவரது மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து 8-ம் தேதி இரவில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த பாஸ்கரை சரமாரியாகத் தாக்கியதாகவும், அந்த ஹோட்டலில் இருந்து சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாஸ்கர் 9-ம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று (9-ம் தேதி) இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார்.

பாஸ்கரைத் தாக்கியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து நேராக நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள பாரதியார் சிலையின் அடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகாராஜன் உள்ளிட்ட கட்சியினரும் அமர்ந்து, எம்.பி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.



நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார், பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது மகன்கள் சேவியர் ராஜா, தினகர் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது 147 (சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல்), 294 பி (ஆபாசமாகப் பேசுதல்) 323 (காயம் ஏற்படுத்துதல்) 506 (2) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 307-வது பிரிவில் அவர் மீது கொலை வழக்குத் தொடர வேண்டும் என பா.ஜ.க-வினர் வலியுறுத்தியதால் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களைக் கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அவர்களை அங்கேயே தங்க வைத்திருந்தனர். ‘


பொன்.ராதாகிருஷ்ணன் இரவில் காவல் நிலையத்திலேயே வெறும் தரையில் ஒரு போர்வையை மட்டும் வைத்துப் படுத்து உறங்கினார். அவருடன் சேர்த்து பா.ஜ.க-வை சேர்ந்த 5 பேர் இருந்தனர். பின்னர் அனைவரும் காலை 9 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

ஞானதிரவியம் மீது கொலை வழக்குப் பதியவும் அவரை கைது செய்யவும் வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாக நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகாராஜன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் எந்த வசதியும் இல்லாமல் தரையில் படுத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button