கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன் என சசிகலா கூறியுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். இதனையடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனையடுத்து, அவ்வப்போது தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் சசிகலாவுடன் பேசும் தொண்டர்கள் அவரை தலைமையேற்க வருமாறு அழைக்கிறார்கள்.
ஆனால், அதிமுக தலைமையோ அதிமுகவை பற்றி பேசுவதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சசிகலாவிடம் பேசுபவர்கள் அமமுகவினர் தானேயொழிய அதிமுகவினர் அல்ல என திட்டவட்டமாக கூறியுள்ளனர். அப்படி இருந்த போதிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என சசிகலா கூறிவருகிறார். இந்நிலையில், சசிகலா நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் நாளிதழில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதில், கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்கமாட்டார். அதனையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான்.
எல்லோரும் நம் பிள்ளைகள் தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று சசிகலா கூறியுள்ளார். நேரடி அரசியலில் சசிகலா மீண்டும் வர உள்ளதாக அறிவித்து அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.