அ.தி.மு.க.,வில், புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதில், இரட்டை தலைமையிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால், மாவட்ட செயலர்களுடன் இன்று ஆலோசனை நடக்கிறது.
அ.தி.மு.க., பொன்விழா ஆண்டு 17ம் தேதி துவங்குகிறது. இதனால், மதுசூதனன் மறைவால் காலியாக உள்ள அவைத் தலைவர் பதவியை நிரப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பதவியை கைப்பற்ற, எம்.ஜி.ஆர்., – ஜெ., காலத்தில் பணியாற்றிய மூத்தவர்கள் மத்தியில் கடும் போட்டி உருவாகி உள்ளது.
மூத்த நிர்வாகிகள் பொன்னையன், சைதை துரைசாமி, ஜெயகுமார், தமிழ்மகன் உசேன், வரக்கூர் அருணாசலம், செம்மலை, லியகாத் அலிகான், கருப்பசாமி பாண்டியன் போன்றவர்களின் பெயர்கள், அவைத் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில், ஜெயகுமாரை அவைத் தலைவராக்க ஆலோசிக்கப்படுகிறது.
ஆனால், எம்.ஜி.ஆர்., காலத்து மூத்த நிர்வாகியை நியமிக்க, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்துகிறது. இந்த விவகாரத்தில் இரட்டை தலைமையிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில், கட்சியின் பொன்விழா ஆண்டு மலரை, அவைத் தலைவர் வெளியிட வேண்டும். எனவே, புதிய அவைத் தலைவரை, கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்டோர், மாவட்ட செயலர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
அக்கூட்டத்தில், கிளை கழக தேர்தல் நடத்துவது; டிசம்பரில் பொதுக்குழுவை கூட்டுவது; கட்சியின் பொன்விழா ஆண்டை மாவட்ட வாரியாக சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், வரும் 16ல், ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது; உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, ஆளுங்கட்சியினரை அ.தி.மு.க.,வினர் சட்டரீதியாக எதிர்கொள்வது; 800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ள எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா மற்றும் கட்சி பெயரில் உள்ள பல்வேறு அறக்கட்டளை மீட்டெடுப்பது.
அந்த அறக்கட்டளைகளுக்கு சட்டரீதியாக புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமிப்பது போன்றவை குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #அதிமுகஅவைத்தலைவர் #AIADMK #ADMK