காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (54). இவர், பென்னலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றபோது, 2 வடமாநில வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.இதனால் இந்திரா கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்வாங்கியதும், வழிப்பறி கொள்ளையர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே, கொள்ளையர்கள் தப்பி ஓடும்போது துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்த தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் தனிப்படை போலீசார் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், ட்ரோன் கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். என்கவுன்டரில் பலியான கொள்ளையன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்கஷா என்பது தெரியவந்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வழிப்பறி #காஞ்சிப்புரம்