சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் வயதான தம்பதியினர் மனு அளித்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இல்லறத்தின் அடையாளமாகவும் சந்ததியை வளர்த்தெடுக்கவும் மகன் வேண்டும் என்று தவமாய் தவமிருந்து பெற்றெடுக்கின்றனர் பெற்றோர். கருவில் உருவானது முதல் வெளிஉலகிற்கு வந்து பதின்பருவம் எட்டும் வரை கண்ணும் கருத்துமாக வளர்த்து சமூகத்தில் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து ஒரு அடையாளத்தையும் உருவாக்கி கொடுக்கின்றனர். தான் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் தன்னுடைய மகன் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் உழைத்தே களைத்துப் போகிறவர்கள் ஏராளம். வளர்ந்த பின்னர் மகன்கள் செய்யும் கைமாறு என்ன தெரியுமா, வசதி படைத்தவர்களாக இருந்தால் முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவது. குறைந்த வசதி படைத்தவர்களாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு அவர்களை பற்றிய எந்த கவலையும் இன்றி தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொள்வது. பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்று சட்டம் போடும் அளவிற்கு நாட்டில் பாசமும், பொறுப்புணர்வும் பற்றாக்குறை ஆகிவிட்டது.
ராமநாதபுரத்தில் சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் முதியவர் மனு அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). இவர் நேற்று ஆம்புலன்சில், படுத்த படுக்கையாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் வந்து மனு அளித்தார். அந்த மனுவில், நான் வெளிநாட்டில் சம்பாதித்து கே.கே.நகரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வந்தேன். எனது மகள்களை திருமணம் செய்து கொடுத்த நிலையில் எனது ஒரே மகன் முனீஸ்வரன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு, உங்களை பார்த்து கொள்கிறோம். வீடுகளை பேரன்களின் பெயரில் உயில் எழுதி வையுங்கள் என்று கூறினர். அவர்கள் கேட்டு கொண்டபடி உயில் எழுதி கையெழுத்திட்ட பின்னர் பத்திரத்தை பார்த்தால், இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கி மோசடி செய்து விட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதன்பின்னர் எங்களை கவனிக்காமல் வீட்டைவிட்டு துரத்தி வெளியேற்றி விட்டனர். இதனால் நாங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறோம். தற்போது சாப்பிடக்கூட வழியின்றி, முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்கு கூட பணம் தரவில்லை.
எனவே, சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு எங்களை பராமரிக்காமல்விட்ட எனது மகனிடம் இருந்து நான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஏமாற்றி சொத்துக்களை பெற்றுக்கொண்டது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் சொத்துக்களை மீட்டு கொடுத்து நாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறி மனுக்கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காமல் விட்ட மகனிடம் இருந்து சொத்துக்களை திரும்ப பெற்றுத்தரக்கோரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்