கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது.
இந்த அணை அழகு கொஞ்சும் இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது அதன் சிறப்பாகும். தற்போது, நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதியில் பெய்யும் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து உயர்ந்து காணப்படுகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும்.
கடந்த சில தினங்களாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்ட உயரம் 86 அடியிலிருந்து 91 அடியாக உயர்ந்தது. அணையில் மின் உற்பத்திக்காக ஒரு எந்திரத்தை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வெளியேறியது.
இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 91 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்தது. மீண்டும் மின் உற்பத்திக்காக இரண்டு எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது.
தொடர் மழை காரணமாக அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி பார்க்க பிரமிப்பாகவும், கண்ணைகொள்ளை கொள்வதாகவும் உள்ளது.
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.