கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் தான் தற்போது தமிழகத்தில் ட்ரொண்டாகி வருகிறது. அதாவது, இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். இதே போல பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். இதில் கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.
இதைத்தொடர்ந்து, பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக்கு, அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட ஓட்டுபோடவில்லை என சமூகவலைதளங்களில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தான் ஒரு ஓட்டு மட்டும் பெற்றது குறித்து பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. நான் இருப்பது 4வது வார்டில் எனக்கும், எனது குடும்பத்திற்கும் 4வது வார்டில் தான் ஓட்டு உள்ளது. 9வது வார்டில் ஓட்டே கிடையாது.
இடைத்தேர்தல் வருவதையொட்டி, 9வது வார்டில் போட்டியிட்டு பார்ப்போம் என அங்கு போட்டியிட்டேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக சரிவர பிரச்சாரம் செல்ல முடியவில்லை. நான் அந்த வார்டில் நிற்கிறேன் என்பதை யாருக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும், எனக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது. அதையே நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவேன், அப்போது மிகப்பெரிய வெற்றியை அடைவேன் என்றும் பாஜகவுக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும் கூறினார். மேலும், சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டு வருவது தொடர்பாக கட்சி மேலிடத்தில் கூறி, காவல்துறையிலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்