நிலக்கரித் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் 115 அனல்மின் நிலையங்கள் முடங்கும் அபாயம் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது .
நிலக்கரி இருப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய மின்சார ஆணையம் , நாட்டிலுள்ள மொத்த 135 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 115 இல் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
அதில் 17 நிலையங்களில் ஒரு நாளைக்கு கூட போதுமான இருப்பு இல்லை என்றும் 26 நிலையங்களில் ஒரு நாள் உற்பத்திக்கு மட்டுமே இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது . 22 நிலையங்களில் 2 நாட்களுக்கும் , 18 இல் மூன்று நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது .
வட இந்தியாவில் உள்ள 33 அனல் மின் நிலையங்களில் 9 இல் நிலக்கரி இருப்பு எதுவும் இல்லை . மொத்தத்தில் சராசரியாக நாட்டிலுள்ள அனைத்து மின் நிலையங்களிலும் 4 நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது .
இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி , மின்சாரத்துறை அமைச்சர் ஆர் . கே . சிங் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார் .
அப்போது , நிலக்கரி இருப்பு குறித்தும் , மின் வெட்டு குறித்தும் பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது . நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க சுழற்சி முறையில் மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது .
இதனிடையே அனல் மின் நிலையங்களின் ஒதுக்கப்படாத மின்சாரத்தை , நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது . உபரி மின்சாரம் வைத்துள்ள மாநிலங்கள் அதனை பிற மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் , மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது .
உபரி மின்சாரத்தை வியாபார நோக்கில் விற்பனை செய்தாலோ , ஒதுக்கப்படாத மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருந்தாலோ , மத்திய அரசு அதனை மின்சார தேவையுள்ள பிற மாநிலங்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
டெல்லி மட்டுமல்லாமல் உத்தர பிரதேசம் , ராஜஸ்தான் , பஞ்சாப் மாநிலங்களிலும் வரலாறு காணாத அளவிற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அனல்மின்நிலையம் #நிலக்கரிதட்டுப்பாடு