தென்காசியில் மாவட்டம் கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் ஊராட்சி மன்றத்தலைவராக சந்திரசேகர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. குறிப்பாக இந்த 9 மாவட்டங்களிலும் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 27,003 பேருக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்தனர். இதோடு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்கள், கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பணியிடங்கள்119, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில 5 பணியிடங்கள் போட்டியின்றி நிரப்பட்டன.
ஆனால் சற்று வித்தியாசமாக தென்காசி மாவட்டத்தில் குடவோலை முறையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிரப்பப்பட்டள்ளது. குறிப்பாக பழங்காலத்தில் தான் கிராம நிர்வாக சபை உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பதற்காக குடவோலை முறை நடைமுறையில் இருந்தது. இதில் தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதிய பிறகு அதை மொத்தமாகக் கட்டி ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
அந்த நடைமுறைத்தான் தற்போது தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கிளாங்காடு ஊராட்சி மன்றத் தேர்தலில் நடந்துள்ளது. இங்கு தலைவர் பதிவிக்கு போட்டியிட்ட சந்திரசேகர் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் தலா 1034 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் யாரை ஊராட்சிமன்றத்தலைவராக நியமனம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே இருவரும் சம வாக்குகளைப் பெற்றதையடுத்து பழைய நடைமுறையப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வானார். இந்நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரெங்காபுரம் கிராம வார்டு உறுப்பினர் பதவியை அக்கிராம மக்களே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தமையால் அங்கு தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #குழுக்கல்முறைதேர்வு #உள்ளாட்சிதேர்தல் #தென்காசி