*ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை*
*என வைரமுத்துவின் வரிக்கு உவமையான தென்காசியின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா குறித்து விரிவான செய்தி தொகுப்பை தற்போது விரிவாக காணலாம்……..*
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுப்பிரமணியன் (55). விவசாயியான இவரது மனைவி சாந்தி (49). சாந்தி அரசு பள்ளியில் பணிபுரியும் ஓர் முதுநிலை ஆசிரியர். ரவி சுப்பிரமணியம் – சாந்தி தம்பதியினருக்கு சாருகலா என்ற மகளும் அழகு சந்துரு என்ற மகனும் உள்ளனர். அழகு சந்துரு (19) மருத்துவ சேர்க்கைக்காக நீட் தேர்வு எழுதியுள்ளார். சாருகலா (22) தற்பொழுது முதுநிலை (M.E) பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களது கிராமத்தில் இதற்கு முன்னர் 3 முறை ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றிருந்தவர் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
அப்போது தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. “யாரோ ஒருவர் செய்யவில்லை என குறை கூறுவதற்கு பதில் நாமே செய்யலாமென” முன்வந்து துணிந்து சுயேட்சையாக பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
இவரது வாக்கு சேகரிப்பு, இவரது வயது, இவரது கல்வி, இவரது சிந்தனை போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு உள்ளாட்சியிலும் நல்லாட்சி கிடைக்குமென எண்ணி வாக்குகளை வாரி வழங்கி சாருகலாவை மாபெரும் வெற்றி பெற வைத்துள்ளனர்.
3336 வாக்குகளுடன் 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொடி நாட்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து இளைஞர்களின் அரசியல் வருகைக்கு பிள்ளையார் சுழி போட்ட சாரு கலாவிடம் உரையாடியபோது நமக்கும் கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைக்க தான் செய்தது.
“ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்,
ஆயுதம் எதுவும் தேவையில்லை…”
என வைரமுத்துவின் வரிகளுக்கு ஏற்ப 3 உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிக்கனி ருசித்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட தயங்குவோர் மத்தியில் சுயேட்சையாக எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சாருகலா வென்றது, பல தேசிய ஊடகங்களையும் தமிழ்நாட்டின் தென்றல் தவழும் தென்காசி பக்கம் இழுத்து வந்தது.
பயின்ற கல்லூரியிலும் துறை செயலாளராக இருந்த சாருகலா குறித்து அவரது தாய் சாந்தியிடம் நாம் உறையாடிய போது அவர் கூறிய பதில்கள் நம்மை வியப்பில் ஆழத்தியது. ஆம், சாருகலா போட்டி தேர்வுக்கு பயிலும் போது கூட அரசியல் பாடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராம்.
சாலை வசதிகள் மேம்படுத்துதல், குடிசை இல்லாத கிராம ஊராட்சியாக மாற்றுதல், 6 மாதத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், இந்தியாவின் முதல் தூய்மையான கிராம ஊராட்சியாக ஆக வெங்காடம்பட்டியை மாற்றுதல், மேல்நிலை பள்ளி கல்வியோடு படிப்பை நிறுத்தும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களை கல்லூரி செல்ல மூளைச் சலவை செய்தல், மாணவர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல், போட்டித் தேர்வுகளில் பங்கேற்போரை திறம்பட மேம்படுத்த நூலக வசதி அமைத்துத் தருதல் போன்ற கனவு கோட்டைகளை கட்டியவர் சாருகலா.
அரசியலில் உங்களை அகத்தூண்டியவர் யாரென கேட்டபொழுது சாருகலா கூறிய பதில் கனவுக் கோட்டைகள் நினைவில் கட்டி முடிக்கப்படும் என உணர்ந்தோம்…
ஆம் அவரின் அரசியல் இன்ஸ்பிரேஷன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி…
சமத்துவம், சாதுர்யம், முற்போக்கு சிந்தனை போன்றவற்றால் மக்களின் பேராதரவுடன் வெற்றி வாகை சூடி தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக பெருவாரியான மக்கள் ஆதரவுடன் பதவியேற்க உள்ளார் சாருகலா. இவர் தனது கனவு கோட்டைகளை வரலாற்றாக மாற்றி அடுத்த முறை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என நாமும் நம்ப மனமிருந்தால்… மார்க்கமுண்டு…
வாழ்த்துக்கள் சாருகலா…
(இனியொரு விதி செய்வோம்)
செய்திகள் : குமரன், சங்கரன்கோவில்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உள்ளாட்சித்தேர்தல் #இளைஞர்_அரசியல் #இளம்_ஊராட்சிமன்றத்தலைவர் #Youngster