மனைவியின் பிரசவத்திற்கு பின் குழந்தை இறந்த நிலையில் மேலதிகாரி விடுமுறை தராததால் தற்கொலை செய்யப்போவதாக ஆயுதப்படை காவலர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 29ம் தேதி இவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் 7 மாத கர்ப்பிணியான மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். உடனே கடலூருக்கு வரும்படியும் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.
நெல்லை ஆயுதப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர் டேனியலிடம் 4 நாட்கள் விடுப்பு தரும்படி அலெக்ஸ் போனில் கேட்டுள்ளார். அதற்கு அவர், நீங்கள் 4 நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு சென்ற பிறகு நிலைமையை கூறுங்கள். அதைப் பொறுத்து விடுப்பை நீட்டித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறேன்.
அதன் பேரில் 4 நாட்கள் விடுப்பு எடுத்து அலெக்ஸ் கடலூருக்கு சென்றுவிட்டார். அங்கு அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து தாயும், சேயும் நலமாக இருந்தனர். ஆனால் மறுநாளே குழந்தை இறந்துள்ளது. இதையடுத்து அலெக்ஸ் மீண்டும் இன்ஸ்பெக்டர் டேனியலுக்கு போன் செய்து, ஒரு வாரம் விடுப்பை நீட்டிக்கும்படி கூறியிருக்கிறார்.
ஆனால் 6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் இருந்ததால் விடுப்பை நீட்டிக்க இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அலெக்ஸ், தேர்தலுக்கு முன்னதாக வேலையில் சேர்ந்து இருக்கிறார் அவருக்கு பாபநாசம் அணை பாதுகாப்பு பணி டூட்டி போடப்பட்டுள்ளது.. அதன்பேரில் அங்கு பணிக்கு சென்றார்.
தேர்தல் முடிந்ததும் 7ம் தேதி கடலூர் செல்வதற்காக மீண்டும் குறிப்பிட்ட இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு விடுப்பு கேட்டிருக்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அலுவலகத்தில் இருந்து அவருக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 2 நாள் விடுப்பு எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் மன உளைச்சல் அடைந்த அலெக்ஸ் செல்போனில் அவரது குமுறலை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த ஆடியோவில் “என்னை வேண்டும் என்றே பழிவாங்க பாபநாசம் அணை பகுதியில் டியூட்டி போட்டுள்ளனர். அங்கு செல்போன் டவர் கிடைக்காது. இதனால் எனது மனைவியிடம் பேச முடியவில்லை.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் இருக்கும் மனைவி என்னுடைய போன் வராததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். எனக்கு லீவு கொடுக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய போனை இன்ஸ்பெக்டர் டேனியல் எடுக்கவில்லை. இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அலெக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவரது அறை வெளிப்புறமாக பூட்டி உள்ளது. அலெக்ஸ் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அலெக்சின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு என்ன ஆனது, அவர் என்ன முடிவெடுத்தார் என்பது தெரியாமல் பதற்றமாக உள்ளது. இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அருணாசலம் என்பவர் ஆடியோ வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். அவர் வெளியிட்ட ஆடியோவில், ‘நேர்மையாகப் பணியாற்றும் எனக்கு அதிகாரிகள் கொடுக்கும் டார்ச்சர் மற்றும் பணிச்சுமை காரணமாக என் இதயத் துடிப்பு நின்று விடும் நிலை உள்ளது’ என்று உருக்கமாகப் பேசியிருந்தார். அந்த சமயத்தில் நெல்லைக்கு வந்திருந்த காவல்துறை டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு அவரை அழைத்து ஆறுதலாகப் பேசி அனுப்பினார். இந்த சூழலில் நெல்லையில் புதிதாக ஒரு காவலர் தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு_காவல்துறை #திருநெல்வேலி #ஆயுதப்படை_காவலர்