விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு நிலவும் நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், உள்ளூர் செல்வாக்கால் அவர்கள் வெற்றி பெற்றதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை உள்ளூர் செல்வாக்குத்தான் முக்கியம். விஜய்க்காக வாக்களித்தார்கள் என நான் நினைக்கவில்லை.
அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் வாழ்த்துகள். நாம் தமிழர் படுதோல்வியடையவில்லை. சில இடங்களில் வென்றிருக்கிறது. ஒரே நாளில் ஒரு செடி பூத்துவிடாது. படிப்படியாகத்தான் ஒரு கட்சி வளரும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை நகர் முழுவதும் சீமானுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், அரசியலின் செல்லாக்காசு ச்சீ சீமானே.. வன்மையாக கண்டிக்கிறோம், எல்லா தேர்தலிலும் அடி வாங்கும் உங்களுக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? உடனடியாக மன்னிப்பு கேள்.. இது எச்சரிக்கை அல்ல கட்டளை..” இவ்வாறு சீமானை கடுமையாக சாடி போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
சுயேச்சையாக போட்டி விஜய் மக்கள் இயக்கம் கட்சி கொடி, விஜய் பெயரை பயன்படுத்தி சிலர் போட்டியிட்டாலும் கூட, அனைவருக்கும் ஒரே சின்னம் கிடையாது. எனவே சுயேச்சையாகவே அவர்கள் போட்டியிட்டதாக கணக்கு. அந்த அடிப்படையில்தான் சீமான் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சீமான் தனது பேட்டியில், அதிக இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியிருந்தார். அப்படியிருக்கும்போது ஏன் இவ்வளவு கடுயான வார்த்தைகளில் சீமானுக்கு சிலர் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டினர் என்பது தெரியவில்லை.
அண்மையில் பேட்டி ஒன்றில், விஜய் தனது தம்பி என்று சீமான் கூறியிருந்தார். இதனால் இந்த விஷயத்தில் விஜய் தலையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நாம் தமிழர் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #விஜய்_மக்கள்இயக்கம் #சீமான் #விஜய் #அரசியல்