செய்திகள்

டாக்டர் APJ. அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று..!

தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், பொருளாதார அறிஞர், இந்திய குடியரசுத் தலைவர், நல்லாசிரியர் என பல பெருமைகளுக்குக் சொந்தக்காரர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

இவரது முழுப்பெயர் ஆவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்.

1931 ம் ஆண்டு, அக்டோபர் 15ம் நாள் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். பெற்றோர் ஜெய்னுலாப்தீன் – ஆஷியம்மா. இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார் கலாம்.

ஆனால், குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். இயற்பியலில் இளங்கலை பட்டம் வென்ற அவர், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், எம்.ஐ.டி-யில் விண்வெளி பொறியியல் படித்து பட்டம் பெற்றார்.



1960ம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக இணைந்தார் அப்துல் கலாம். ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்தார். துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) முக்கிய பங்காற்றினார்.

1980ம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்ததில் கலாமின் பங்கு முதன்மையானது. இதற்காக மத்திய அரசு கலாமுக்கு 1981ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.



1963ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்து வந்தார். 1999ம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஐந்து ஏவுகணை திட்டங்களில் இன்றியமையாத பங்காற்றியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற இவரை, இவர் மீதிருந்த அளப்பரியா காதலினால், இந்திய மக்கள் “மக்களின் குடியரசுத் தலைவர்” என்று அன்போடு அழைத்தனர்.

2007ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கலாம் மக்களின் பேராதரவை பெற்று மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டார்.

ஜூலை 27, 2015ல் ஷில்லாங்கில் உள்ள IIMல் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து காலமானார்.



இறுதிவரைக்கும் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘கனவு காணுங்கள்..அதனை நினைவாக்க முயற்சி செய்யுங்கள்’ என்று இளைஞர்களிடையே உற்சாகத்தை ஊட்டியவர். அவரது எளிமையான வாழ்க்கை இளைஞர்களிடையேயும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

2015ம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளை ‘உலக மாணவர்கள் தினமாக’ கொண்டாட ஐ.நா அறிவித்தது. அதன்படி அவரது பிறந்தநாளான இன்று உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.



கலாம் பெற்ற விருதுகள்


► 1981 – பத்ம பூஷன்

► 1990 – பத்ம விபூஷன்

► 1997 – பாரத ரத்னா, தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

► 1998 – வீர் சவர்கார் விருது

► 2000 – ராமானுஜன் விருது

► 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், கிங் சார்லஸ்-II பட்டம்

► 2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

► 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, ஹூவர் மெடல்

► 2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

► 2012 – சட்டங்களின் டாக்டர், சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button