உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறி ஸ்மார்ட் கார்டை முடக்கிய வட்ட வழங்கல் அதிகாரி- பல முறை புகார் அளித்து நடவடிக்கை இல்லை குற்றம் சாட்டும் ஆதரவற்ற முதியவர்….
நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 80 வயது முதியவர் காளிமுத்து. இவரது தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மனைவி காலமானதை தொடர்ந்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல ரேஷன் பொருட்கள் வாங்க நியாய விலைக்கடைக்கு சென்றிருக்கிறார். இன்று சர்க்கரை, கோதுமை, அரிசி என அனைத்தையும் வாங்கி வர வேண்டும் என்கிற ஆசையில் போனவருக்கு அதிர்ச்சியே கிடைத்தது. அவரது ஸ்மார்ட் கார்டை வாங்கிய ரேஷன் கடை ஊழியர், ‘உங்கள் கார்டு செயலழிந்து விட்டதாக’ தெரிவித்துள்ளார்.
ஏன் என முதியவர் கேள்வி கேட்க, ‘நீங்கள் இறந்துவிட்டீர்கள்….’ என்று கூறியுள்ளனர். முதியவருக்கு எதுவும் புரியவில்லை. ‘என்னது நான் இறந்துவிட்டேனா… அப்போ நான் என்ன ஆவியா…’ என்று கேட்டுள்ளார். இவ்லை .. நீங்கள் இறந்ததாக உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர் காளிமுத்து, வெம்பகோட்டை வட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அடுத்தடுத்து புகார் செய்துள்ளார். ரேஷன் பொருட்கள் மட்டுமே அவருக்கு ஒரே ஆதாரம். அதில் தற்போது விழுந்துள்ள கீறல், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் அட்டையை பயன்பாட்டில் கொண்டு வந்து தனது வறுமையை போக்க வலியுறுத்தி அவர் எடுத்த முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை. இது குறித்து கவலை தெரிவிக்கும் முதியவர் காளிமுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ‘தொடர்ந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தான் இருந்தேன். திடீரென ஒரு நாள் நான் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். யார் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. தலையாரியிடம் போய் கேட்டால், ‘யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லிக்கோ…’ என்கிறார். எனக்குறிய உரிமையை தான் கேட்கிறேன். சட்ட போராட்டம் நடத்தி என் உரிமையை மீட்பேன்,’ என்றார்.
இது குறித்து வெம்பகோட்டை வாட்ட வழங்கல் அதிகாரி சிவஞானந்ததிடம் கேட்டபோது, ‘ ஸ்மார்ட் அட்டை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை தலைமை வட்ட வழங்கல் அலுவலகத்தில் பரிந்துரை செய்துள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தார்
உயிரோடு உள்ள ஒருவரை எதன் அடிப்படையில் இறந்ததாக பதிவு செய்தனர்… மறுக்கப்பட்ட அவருக்கான உரிமை மீண்டும் மீட்கப்படுவது எப்போது… என்கிற பல கேள்விகளுடன் இந்த விவகாரம் தற்போது நகர்ந்து வருகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஸ்மார்ட்_கார்டு #SmartCard #தமிழ்நாடு