திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று (14ம் தேதி) காலை 8 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்துசேர்ந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவிட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரத்தில், விமான நிலையத்தின் வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி வாலிபர் ஒருவருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். இதையடுத்து, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் சிங்கப்பூரில் தரகர் ஒருவர் கொடுத்தனுப்பிய தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே நிற்பவரிடம் கொடுத்தால் அந்த நபர் 10,000 ரூபாய் தருவார் என கூறியுள்ளனர்.
இதனை நம்பி அந்த நபரும் தங்கத்தைக் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வெளியே நின்ற வாலிபர் பத்தாயிரம் ரூபாய்க்கு பதிலாக 5,000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரண்டு பேரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் அவர்களை விசாரித்துவிட்டு மீண்டும் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தங்கம் கடத்திவந்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கஸ்டம்ஸ் #Castems #சுங்கத்துறை_சோதனை