கள்ளக்குறிச்சியில் இரண்டு காவல் நிலையங்களில் மாறி மாறி டூட்டிக்கு கூப்பிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பணிக்கு வரவில்லை என்று ஒரு காவல்நிலையத்தில் ஓபன் மைக்கில் அறிவித்ததால் விரக்தி அடைந்து இந்த விபரீத முடிவினை அந்த பெண் போலீஸ் எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் காவலர்கள் பலர் மிகுந்த மன அழுத்தத்துடன் பணியாற்றுகிறார்கள். லீவு கிடைக்காதது, ஓய்வின்றி வேலை செய்வது, நேரம் காலம் என்று எதுவும் இன்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவது, உயர் அதிகாரிகளின் அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.
குறிப்பாக மகளிர் போலீசார் நிலை மிக கவலை தரும் வகையில் தான் உள்ளது. குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் தவிப்பது, விடுமுறை கிடைக்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை, உயர் அதிகாரிகளின் அழுத்தம் போன்றவை நெருக்கடி தரும் வகையில் இருப்பதாக பல பெண் போலீசார் குமுறுகிறார்கள். சில நேரங்களில் மன அழுத்தத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து விடுகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தீபா கடந்த 7 மாதமாக தற்காலிகமாக அயல்பணியாக (ஓடியாக) வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் , தீபாவை மகளிர் காவல் நிலையத்திற்கு பணிக்கு வருமாறு கடந்த 4 நாட்களாக அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வரஞ்சரம் காவல் நிலைய அதிகாரிகள், தீபாவை கோர்ட் பணியில் ஈடுபடுமாறு வலியுறுத்தி உள்ளனர். இரண்டு காவல் நிலைய போலீசார் மாற்றி மாற்றி பணிகளுக்கு அழைக்கப்பட்டதால் எங்கு பணியாற்றுவது என தெரியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்,
இதனிடையே தீபா கள்ளகுறிச்சி மகளிர் காவல் நிலைத்தில் பணிக்கு வரவில்லை என ஓபன் மைக்கில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதனைடுத்து வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்ற தீபா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
காவலர் தீபா விஷம் குடித்ததை கேள்விப்பட்டு பதறிப்போன சக காவலர்கள், அவரை கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சிகிச்சை பெற்று வருகிறார் உயர் அதிகாரிகள் அழுத்தத்தின் காரணமாக பெண் போலிஸ் விஷம் குடித்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது மிகவும் தவறு. தற்கொலை எண்ணம் இருந்தால் தயவு செய்து அரசின் இலவச உதவி எண் 104 ஐ அழைத்து மனநல ஆலோசனை பெறுங்கள். அல்லது 9152987821 என்ற எண்ணில் அழைத்து ஆலோசனை பெறுங்கள். தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்ப்போம். வாழ்க்கையை வாழ்வோம்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கள்ளக்குறிச்சி #பெண்காவலர் #தற்கொலைமுயற்சி #தமிழ்நாடு_காவல்துறை #TamilNaduPolice #WomenPolice