அதிமுகவின் பொன் விழா கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் செல்ல சசிகலா திட்டமிட்டார்.
அதன்படி, இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் மெரினா கடற்கரைக்கு புறப்பட்டார்.
சசிகலா சென்ற கார் மீது பூக்களைத் தூவி அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழியில் உள்ள கோவில் ஒன்றில் சசிகலா வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து காரில் சென்ற அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
சுமார் ஒரு மணிநேர பயணத்திற்குப் பின் மெரினா கடற்கரையைச் சென்றடைந்த சசிகலாவை வரவேற்பதற்காக, தொண்டர்கள் திரண்டிருந்தனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு இடையே மெதுவாகச் சென்ற சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பார்த்ததும் உடைந்து போய் கண்ணீர் விட்டார். பிறகு, நினைவிடத்தின் மீது மலர் தூவிய அவர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 10 நிமிடங்கள் அங்கே மவுனமாக நின்றார்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலாவுக்கு கொடுக்கப்படும் ‘பில்டப்’ செயற்கையானதாக இருக்கிறது; இயற்கையாக இல்லை. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதில் பெரிய விசேஷம் கிடையாது. இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது.
சசிகலா நினைப்பது நடக்கப்போவதில்லை. யானை பலம் கொண்டது அதிமுக. அத்தகைய பலம் கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்வது நகைச்சுவை. இதனை, எள்ளி நகையாடும் வகையில்தான் எல்லோரும் பார்ப்பார்கள். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.
அக்டோபர் 17ம் தேதிதான் அதிமுகவின் பொன்விழா. ஆனால் அவர் 16ம் தேதி செல்கிறார். அதுகூட தெரியாதா? வேண்டுமென்றே கட்சிக் கொடியை பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க முயல்கிறார் சசிகலா. அதனைத் தடுத்து, சட்டத்தை நாங்கள் கையிலெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சசிகலாவுக்கு அமமுகவில் ஒரு நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சியில் அவருக்கு இடம் இல்லை” என்றார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல்செய்திகள் #சசிகலா #ஜெயக்குமார் #அதிமுக #அதிமுகபொன்விழா #Sasikala #ADMK #Jeyakumar