அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நினைவில்லத்தில் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. எங்களிடம் தான் கட்சிக்கொடி, சின்னம் இருக்கிறது. உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இதை தெரிவித்துவிட்டது. அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.
சசிகலா ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஆகிவிட முடியுமா? செஞ்சி கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு ஆகிவிட முடியுமா? மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியுமா?
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வந்து 8 மாதங்கள் ஆகிறது. அவர் அப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறாரா? பொன்விழா ஆண்டு அடுத்த ஆண்டு வந்தால், அவர் அடுத்த ஆண்டுதான் வெளியே வந்திருப்பார்.
பொன்விழா எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. பொன்விழா எழுச்சியுடன் கொண்டாடப்படுவது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்?
1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு அவர்தான் காரணம். சசிகலாவின் குடும்பத்தினரால் தான் தோல்வி ஏற்பட்டது.
சசிகலா தனது குடும்பம் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், வாழ்க்கைத்தரத்தில் உயர வேண்டும் என்று பாடுபட்டார். சசிகலா கட்சிக்காரர்களை சுரண்டி, சித்ரவதை, கொடுமை செய்ததை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள்.
வானத்தில் இருந்து குதித்த அவதாரம் போல் நான்தான் புரட்சித்தாய் என்று சொல்கிறார். புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? தனது குடும்பத்துக்காகவே வாழ்ந்தார், என ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்தார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #அதிமுக_பொன்விழா #சசிகலா #ஜெயக்குமார் #சசிகலா_கல்வெட்டு