தனியாா்மயமாக்கப்படவுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட சொத்துகளைப் பணமாக்குவதற்கென தனி நிறுவனத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து முதலீட்டு பொதுச் சொத்துக்கள் மேலாண்மைத் துறை செயலர் துஹான் காந்த பாண்டே கூறுகையில், “சில பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள சில சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அச்சொத்துகளை பணமாக்குவதற்கென சிறப்பு நிறுவனத்தை உருவாக்க மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவுள்ளது. தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பணமாக்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் திறம்பட செயல்படும்.
அத்தகைய நிறுவனத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியாரிடம் ஒப்படைக்கப்படும் சொத்துகளை தவிர இதர சொத்துகள் பணமாக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு பொது நிறுவனங்கள் துறையின் கீழ் அந்நிறுவனம் செயல்படும்” என்றார்.
பாரத் பெட்ரோலியம், இந்திய கப்பல் கழகம், ஐடிபிஐ வங்கி, பிஇஎம்எல், நீலாச்சல் இஸ்பத் நிகம் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நடப்பு 2021 – 2022ம் நிதியாண்டிற்குள் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பாரத்_பெட்ரோலியம் #IDBI_bank #PrivateCompamy