பசுமை தீர்ப்பாயத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தென்னையை பாதிக்கும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் நலனை பாதுகாத்திட தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும், பொள்ளாச்சியை மையமாக வைத்து தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், கோவை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் எக்டர் பரப்பளவுக்கு மேல் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பால் தென்னையை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டு வரும் கயிறு தொழிற்சாலைகள், மட்டை கம்பெனிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே தென்னை விவசாயத்தை காத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளோம்.
அவற்றை தமிழக முதல்வர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
– பொள்ளாச்சி ஜெகன்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பொள்ளாச்சி #பசுமைதீர்ப்பாயம் #விவசாயிகள்போராட்டம்