முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சாய்பாபா காலனி கணபதி லேஅவுட்டை சேர்ந்த அருண்பிரகாஷ் (41) என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனம், ஹேட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன்.
இந்நிலையில், சிட்ரா பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவருடைய மகள் சிந்துஜாவுடன் அருண்பிரகாஷிற்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று சிந்துஜாவிடம் அருண்பிரசாத் தெரிவித்த நிலையில், இது குறித்து தந்தை செங்குட்டுவனிடம் சிந்துஜா கூறியுள்ளார்.
தனது மகளுடன் சேர்ந்து தொழில் செய்வதாக கூறியதால் செங்குட்டுவன், அருண்பிரகாஷிற்கு 1.5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தொழில் எதுவும் தொடங்காததால் செங்குட்டுவன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் பணத்தை திரும்ப கேட்டபோது வால்பாறையில் தேயிலை எஸ்டேட்டை விற்று பணத்தை தருவதாக தெரிவித்தார். ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
அவர் கொடுத்த இரண்டு காசோலைகளும் பணமின்றி திரும்பி வந்து விட்டதாகவும், பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் பிரகாஷை கைது செய்தனர். ஏற்கனவே சிந்துஜா கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கணவரை விட்டு பிரிந்து வசித்த தன்னை அருண்பிரகாஷ் ஹோட்டல் தொழில் செய்வதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.
7 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதுடன், கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி.யிடமும் சிந்துஜா புகார் செய்து இருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அருண்பிரகாஷ் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பணமோசடி #முன்னாள்சட்டமன்றஉறுப்பினர் #கோவை_தங்கம்