அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார்.
அப்போது, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், டி.ஜெயக்குமார். சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்ளை சந்தித்தப்போது, சசிகலா குறித்து பதிலளித்தார்.
அவர் பேசியதாவது, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க. தில்லுமுல்லு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்டு ஜனநாயக படுகொலை செய்து தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பலரை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளது. எங்கெங்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி விளக்கமாக ஆளுநரிடம் மனுவாக கொடுத்திருக்கிறோம். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து சசிகலா தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். பொதுச்செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவர் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அது பற்றி எங்களுக்கு என்ன? சூரியனை பார்த்து… யாருக்கு என்ன பயம்? ஓப்பனாக நான் சொல்லக்கூடாது, என கூறினார்.
ஏற்கனவே நீதிமன்றம் சொல்லிவிட்டது. தேர்தல் கமிஷனும் சொல்லி விட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது நாங்கள் தான் அதிமுக என்று என்று. சசிகலா பொழுது போகாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் என்ன செய்வது. உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான். சசிகலாவுக்கு இங்கு இடம் இல்லை. அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பின்னர், சசிகலா மறப்போம் மன்னிப்போம் என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு, அவர் சொல்லிவிட்டு போகட்டும். அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தெளிவாக பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஊடகங்கள் தான் அவரை பெரிது படுத்துகின்றன என சாடினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #ADMK #சசிகலா #எடப்பாடிபழனிச்சாமி #EdappadiPalanisamy