திண்டுக்கல்லில் கடை முன்பு தூங்கிய முதியவரை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காவலாளி கொலை
திண்டுக்கல் வேதாத்திரிநகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). இவருடைய நண்பர் கண்ணன், திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடை வைத்து இருக்கிறார். இதனால் அந்த கடைக்கு கருப்பையா அடிக்கடி செல்வது வழக்கம். அதன்படி கடந்த 30.11.2008 அன்று இரவு கருப்பையா அந்த கடைக்கு சென்றார். அப்போது கருப்பையாவை இரவு கடையில் படுத்து கொள்ளும்படி கண்ணன் கூறினார்.
அதன்பேரில் இரவு கடையின் முன்பு கருப்பையா படுத்து தூங்கினார். ஆனால் மறுநாள் காலையில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது கருப்பையா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திண்டுக்கல் மார்க்கெட் குமரன் தெருவை சேர்ந்த நாகராஜ் (வயது 40) என்பவர், கருப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது.
*10 ஆண்டுகள் சிறை*
மேலும் கண்ணன் மீதான முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் அவருடைய கடைக்கு நாகராஜ் சென்றுள்ளார். அப்போது கடை முன்பு தூங்கிய கருப்பையாவை, கண்ணன் என நினைத்து இரும்பு கம்பியால் நாகராஜ் தாக்கி உள்ளார். அதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்தார். போலீஸ் அதிகாரிகள் உள்பட மொத்தம் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதற்கிடையே வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட நாகராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
செய்திகள் : ரியாஸ் கான், திண்டுக்கல்