விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த இருவர் போட்டியிட்ட நிலையில் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுகவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் குழுவினருக்கும், மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணன் குழுவினருக்கும் இடையே காலை ஒன்பதரை மணியிலிருந்து வாக்குவாதம் நடைபெற்று வந்தது.
இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேர்தல் நேரம் தொடங்கியதிலிருந்து அரைமணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. பத்தரை மணி ஆகியும் யாரும் வராத காரணத்தால் தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கண்ணனின் ஆதரவாளர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் தயாளன் குழுவினர் ஆரவாரத்துடன் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.