கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் திமுக எம்.பி. ரமேஷ்க்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிசிஐடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ், கடந்த செப்டம்பர் மாதம்19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் இது குறித்து, அவரது மகன் செந்தில்வேல் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இதில் திமுக எம்.பி. ரமேஷ்க்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவர் உள்பட 6 பேர் மீது கடந்த 9ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். மேலும் எம்.பி. ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
இதனிடையே, கடந்த 11ஆம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ரமேஷ் சரணடைந்தார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், எம்.பி. ரமேஷ் சாா்பில் ஜாமீன் கேட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் ரமேஷ்க்கு ஜாமீன் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக #கடலூர் #ரமேஷ் #கொலை #DMK #MP #Kadaloor