தொடர்ந்து தமிழகம்தான் முதலிடம்!!! கயிறு வாரிய தலைவர்…
நார்ப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்று மத்திய கயிறு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் நார் உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நார்த்தொழிற்சாலைகளில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கயிறு வாரிய தலைவர் குப்புராமு பேசுகையில், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
தென்னையை சார்ந்த கயிறு மற்றும் நார் உற்பத்தி தொழில் சமீப காலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.
2020-2021ம் ஆண்டில் மட்டும் கயிறு பொருட்களின் ஏற்றுமதி 3 ஆயிரத்து 780 கோடி ஆகும். உள்நாட்டு தேவைகளுக்கான உற்பத்தி சுமார் ரூ. 12 ஆயிரம் கோடி ஆகும். இயற்கையோடு இணைந்து சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லாத இந்த கயிறு தொழில் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
கயிறு பொருட்கள் உற்பத்தியை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கயிறு பொருட்கள் உற்பத்தியை பெருக்குதல், சந்தைப்படுத்துதல், உற்பத்தியாளர்களுக்கு உள்ள சிரமங்களைப் போக்குதல் ஆகியவற்றிற்கு கயிறு வாரியம் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், கயிறு வாரிய மண்டல இயக்குனர் பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் : ஜெகன், பொள்ளாச்சி
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகம் #நார்கயிறுஉற்பத்தி #CocunutFiberRope #TamilNadu