பக்கா ஸ்கெட்ச்..! சிறையிலிருந்து காய் நகர்த்திய ரவுடி…”பாம்”ரவி கொலை…மாட்டிக்கிட்ட கூட்டாளிகள்…
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியை சார்ந்தவர் பாம் ரவி (வயது 33). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த பாம் ரவியின் மீது 6 கொலை, 7 வெடிகுண்டு வீச்சு உட்பட 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்துள்ளான்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வாணரப்பேட்டை முருகசாமி நகரில் உள்ள காண்ட்ராக்டர் அந்தோணி (வயது 28) என்பவரின் வீட்டிற்கு செல்ல ரவி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற நிலையில், அவனை பின்தொடர்ந்து வந்த மற்றொரு தரப்பு வழியில் இடைமறித்து வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மக்கள் அனைவரையும் பீதி அடைய செய்தது.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரவியை கொலை செய்வதற்கான திட்டம் காலாப்பட்டு சிறைக்குள் போடப்பட்டதை போலீசார் முதலில் கண்டு பிடித்தனர்.
மேலும், முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி வினோத்திற்கும், ரவிக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. இதனால் வினோத்தின் கூட்டாளி திப்லான் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்குப் பழிவாங்கும் விதமாக ரவியைக் கொலை செய்ய வினோத்தின் கூட்டாளிகள் முடிவு செய்தனர். இந்த முடிவின் படி கடந்த ஜூன் 6-ம் தேதி ரவியைக் கொலை செய்ய வாணரப்பேட்டியில் காத்திருந்தனர். ஆனால் அப்போது ரவி அங்கு வரவில்லை. இதனால் இந்த திட்டத்தைத் தள்ளிவைத்தனர்.
இதனிடையே சூதாட்டம் கிளப்பிற்குள் புகுந்து 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில் கடந்த மாதம் 19-ம் தேதி வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருந்தபோதும் வினோத் காலாப்பட்டு சிறையிலிருந்து கொண்டே ரவியைக் கொலை செய்வதற்கான திட்டத்தைப் போட்டுச் செயல்படுத்தும் படி கூட்டாளிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின அடிப்படையில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி, ரவியை வினோத்தின் கூட்டாளிகள் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளனர். இதையடுத்து வினோத் மற்றும் தீன் என்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் வினோத்தின் தாய் ரமணி, அரவிந்து, பிரகாஷ், ராஜேஷ், சந்துரு, வெங்கடேசன் நவீன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற கூலிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.