நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ள படம் சூர்யாவின் ஜெய் பீம். கடந்த 24 வருடங்களாக சூர்யா தனது நடிப்பை தன் ரசிகர்களுக்காக வெவ்வேறு விதமான வகையில் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் செய்து வருகின்றார். சூர்யாவின் ஜெய் பீம் படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜெய் பீம் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.
ராஜாக்கண்ணு என்பவர்
விருத்தாச்சலத்தின் கம்மாபுரத்தில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1993ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தை பிண்ணனியாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜெய் பீம்.
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் காவல்துறையினால் பாதிக்கப்பட்ட மலைவாழ் இருளர் இன மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மைக் கதையில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான டீசர் சாதி வெறிக்கு எதிரான வசனங்களுடன் பட்டையை கிளப்பியுள்ளது.
படத்தில் ஒரு வழக்கறிஞராக மலைவாழ் மக்கள் படும் துன்பங்களுக்கு குரல் கொடுத்தது மட்டுமில்லாமல் நிஜ வாழ்வில் இருளர் இன மாணவர்களின் நலனுக்காக உதவ முன் வந்துள்ளார் நடிகர் சூர்யா.
2டி நிறுவனம் சார்பில் ரூபாய் 1 கோடியை இருளர் இன மாணவர்களின் கல்விக்காக வழங்கியுள்ளார் சூர்யா. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஆகியோரை சூர்யாவும் ஜோதிகாவும் நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கினர். இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்ற நீதிபதியும் அவர்களுடன் இருந்துள்ளார்.
கட்டுரை : மகாராணி, தென்காசி