விமர்சனங்கள்
Trending

எனிமி எனர்ஜியா? ஏமாற்றமா?

இயக்கம் : ஆனந்த் சங்கர்
நடிகர்கள் : விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா
இசை : எஸ். தமன்
பிண்ணனி இசை : சாம் சி. எஸ்
ஒளிப்பதிவு : ஆர். டி. ராஜ சேகர்

அவன் இவன் திரைப்படத்திற்குப் பின் 10 வருடங்களுக்கு பிறகு விஷாலும் ஆர்யாவும் இணைவதாலும் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஆனந்த சங்கரின் இயக்கம் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் எனிமி.

இப்படத்தில் விஷால், ஆர்யா, மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்களுக்கு எஸ்.தமன் இசையமைக்க சாம்.சி.எஸ் பின்னணி இசையை அமைத்துள்ளார்.

பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் விஷாலும் ஆர்யாவும் சிறு வயதில் நண்பர்கள். ஆர்யாவின் அப்பாவான பிரகாஷ்ராஜ் முன்னாள் சிபிஐ அதிகாரி, விஷாலின் அப்பா தம்பி ராமையா எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். பிரகாஷ் ராஜ் தனது மகனான ஆர்யாவிற்கு சிறுவயதிலேயே போலீஸ் பயிற்சி அளிக்கிறார். விஷாலும் தன் நண்பன் ஆர்யாவுடன் இணைந்து ஆர்வமாக பயிற்சியில் கலந்து கொள்ள விஷாலின் ஈடுபாட்டைக் கண்டு பிரகாஷ்ராஜ் அவருக்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார்.

ஆர்யாவை விட விஷால் பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட இது ஆர்யாவிற்கு விஷாலின் மீது ஈகோ ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் மர்ம நபர்களால் கொல்லப்பட விஷால் ஆர்யா பிரிகிறார்கள். பின்னர் 25 வருடங்களுக்கு பின் விஷால் சிங்கப்பூரில் சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சரை கொலை செய்ய ஒரு கார்ப்பரேட் கும்பல் உலகின் அதிபயங்கர கொலைகாரனான ஆர்யாவை நியமிக்கிறது.

இந்நிகழ்வு ஆர்யா மற்றும் விஷாலை நேர் எதிர் திசையில் நிறுத்துகிறது. விஷால் இந்த சதியை முறியடித்தாரா, சிறு வயதில் போலீஸ் பயிற்சி எடுத்த ஆர்யா எப்படி உலகையே அச்சுறுத்தும் அதி பயங்கர கொலைகாரன் ஆனார், பிரகாஷ்ராஜை கொலை செய்தது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி இறுதியில் ஆர்யாவா விஷாலா யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

வேற யாரு எப்படியும் ஹீரோ தான் ஜெயிப்பாரு, அது போல இதுலையும் ஹீரோ தான் ஜெயிக்குராரு. ஆனால் கதையை கொண்டு செல்கிற திரைக்கதை அமைப்பே படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். அந்த வகையில் எனிமி திரைப்படம் ஒரு சுவாரசியமான ஆக்ஷன் திரைப்படமாக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.

ஆனந்த சங்கர் தனக்கே உரித்தான பாணியில் ஒரு தரமான ஆக்ஷன் திரில்லர் எடுக்க முயன்றுள்ளார். படத்தின் தொடக்கத்தில் பிரகாஷ்ராஜ் விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் போலீஸ் பயிற்சி கொடுக்கும் காட்சிகள் நம்மை நிமிரந்து உட்கார வைத்து படத்துடன் ஒன்ற செய்கிறது. ஆனால் தேவையில்லாத சில ஆணிகளை அடித்து ஆனந்த சங்கர் அவர் தலையில் அவரே மணல் அள்ளி போட்டதும் இல்லாமல் நம்மையும் கேண்டீனுக்கு அனுப்பி பர்சை பதம் பார்த்துவிட்டார். அதை தவிர்த்து திரைக்கதையிலும் இயக்கத்திலும் தன் வழக்கமான பாணியை பின் பற்றி ஓரளவு படத்தை கரை சேர்த்துவிட்டார். அந்த ஆணிகளை தவிர்த்திருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

முதல் ஆணி, மிருணாளினி ரவி. இவர் இந்த படத்திற்கு எதற்கு என்று கேட்க தோன்றுகிறது. விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள மிருணாளினி ரவியின் நடிப்பை விட, ஆர்யாவின் ஜோடியாக நடித்த மம்தா மோகன்தாஸ் நடிப்பு எவ்வளவோ பரவாயில்லை. டிக்டாக் செய்வதாலும், முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்ததாலும் அவருக்கு நடிக்க தெரியமென ஆனந்த் சங்கர் தப்பு கணக்கு போட்டுவிட்டார் போல. (மேடம்க்கு சுத்தமா நடிப்பு வரல சாரே)

அடுத்தது பாடல்கள், தேவையில்லாத இடங்களில் பாடல்களைக் கொண்டு வந்து இயக்குனர் நம்மை நிறையவே சோதித்து விட்டார். (என்னா பாஸ் இதெல்லாம்) பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சுவாரசியத்தை ஏற்படுத்திருக்கும் படம். ஆனந்த் ஷங்கர் படத்தின் இசைக்கு எஸ்.தமனுக்கு (இவர் தான் இரண்டாவது ஆணி) பதிலாக வேறு இசையமைப்பாளரை தேர்ந்தெடுத்திருக்கலாம். (ப்ளீஸ் தமன் நீங்க தமிழ் சினிமாக்கு வராதீங்க, நாங்க ரொம்ப பாவம்)

விஷால், ஆர்யா, தம்பி ராமையா ஆகியோர் படத்தில் தங்களுக்கு குடுத்த வேலையை சரிவர செய்துள்ளனர். கருணாகரன் வருகிறார் அவ்வளவு தான்.

சாம். சி. எஸ் ஒரு ஆக்ஷன் படத்திற்கு ஏற்ற பின்னணி இசையை தந்துள்ளார். ஆனால் சில இடங்களில் இருமுகன் பின்னணி இசை மூளையில் ஒர் ஒரத்தில் ஒலிப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை.

ஆர்.டி.ராஜசேகர், இவர் மொத்த படத்தையும் தன் கேமரா கோணங்களால் உலக தரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். சேஸிங் காட்சிகள், ஆர்யா விஷால் மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சி என அனைத்திலும் இவரின் உழைப்பு அபாரம். (விரைவில் தேசிய வருது வாங்க வாழத்துக்கள் ப்ரோ)

அண்ணாத்தே படம் பார்த்து நொந்து போய் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் சற்று ஆறுதல் தரும் என்பது நிதர்சனம். படக்குழு படத்தை தெரிந்தே இறக்கினார்களே என்னவோ. உண்மையில் அண்ணாத்தே படம் பார்த்து ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு எனிமி எனர்ஜி தான்…

எனிமிக்கு விசில் மதிப்பெண்கள் 06/10

விமர்சனம் : மகாராணி, தென்காசி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button