ரஜினிய வச்சு செஞ்சிட்டீங்க சிவா…
தான் பாசமாக வளர்த்த தங்கையிடம் பிரச்சனை செய்யும் வில்லன்களை “திருப்பாச்சி” அரிவாள் (ஆமா, விஜய் நடிச்ச அதே திருப்பாச்சி தான்) கொண்டு ரஜினி செய்யும் (நம்மளயும் தான்) வதமே அண்ணாத்த படத்தின் கதை
தமிழ் சினிமா ரசிகர்களை என்னவென்று நினைத்தீர்கள் சிவா…? சமீப காலங்களாக வெளிவந்த ரஜினி படங்களிலயே மகா மட்டமான படம் இது. அண்ணன் தங்கச்சி கதை என்று சொல்ல கேட்டோம் ஆனால் அண்ணன் தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் எங்குமே மனதில் ஒட்டவே இல்லை.
தமிழ் சினிமாவில் எத்தனையே சிறந்த வில்லன் நடிகர்கள் இருக்க நீங்கள் மீண்டும் ஜெகபதி பாபுவை தேர்ந்தெடுத்து ஏன்? இன்னோரு பாட்ஷாவாக வேறு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் ஆண்டனியாக ரகுவரனை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என ரஜினியே சொல்லி இருக்கிறார். அப்படிபட்ட பல பவர்புல்லான வில்லன்கள் வலம் வந்த இடம் தமிழ் சினிமா, அதில் இப்படி 2,3 மொக்கை வில்லன்களை வைத்து படம் எடுத்து இருக்கிறீர்கள்.
அடுத்தாக இமான் பக்கம் செல்வோம். ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பாடல், நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு பாடல், அண்ணன் தங்கை கதையல்லவா அதனால் அதற்கு ஒரு சென்டிமென்ட் பாடல். படத்தை குப்பை தொட்டியில் போட வைத்தற்கு முழு முதற் காரணம் இமான் தான். ஏன் இமான் இன்னும் நீங்கள் ரஜினிமுருகன் பாடலை மட்டுமே ரீமிக்ஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள். புதிய மெட்டுக்களை தாருங்கள், காட்சி அறிந்து பிண்ணனி இசை அமையுங்கள் இல்லையெனில் விரைவில் தமிழ் சினிமா ரசிகர்கள் உங்களுக்கு டாட்டா காட்டிவிடுவார்கள்.
நயன்தாரா பற்றி சொல்லும் அளவிற்கு அவர் வரும் காட்சிகளே படத்தில் இல்லை, டூயட் பாடலுக்காகவே அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கிறார்கள் போல.
ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ். இன்னுமா இவருக்கு நடிப்பு வரவில்லை. சிவாவுக்கு தங்கை கதாபத்திரத்திற்கு ஆள் கிடைக்கவில்லையா இல்லை இமானுக்கு போட்டியாக இவரை களமிறக்கியுள்ளாரா…? ரொம்பவே சோதித்துவிட்டார்.
முதல் பாதியில் தூக்கம் வருமளவுக்கு எடுத்துள்ளார் சிறுத்தை சிவா. இரண்டாம் பாதி ஏதோ தெலுங்கு படம் பார்ப்பது போன்று உணர்வு. சிவா அண்ட் டீம் என்று எப்போதும் போடுவார்கள். அந்த டீம் கதை விவாதத்தில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த விவாதத்தில் தான் சூரிக்கான காமெடி காட்சிகள் எழுதினார்களோ என்னவோ.
ரஜினி, நயன்தாரா, தங்கச்சி சென்டிமென்ட், ஒரு கல்யாண பாடல், அக்கட தேசத்து வில்லன்கள் இது எல்லாம் இருந்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தை ஹிட் ஆக்கி விடுவார்களா?
தல நடித்த வேதாளம் பாதி தளபதி நடித்த திருப்பாச்சி பாதி இரண்டையும் கலந்த ஒரு டிவி சீரியல் போல் இருக்கிறது. சில சீரியல் இயக்குனர்கள் கூட சென்டிமென்ட் காட்சிகளை திறம்பட படம் பிடித்திருப்பார்கள். நீங்கள் ஏன் சிவா சூப்பர் ஸ்டாரை வைத்து கொத்து பரோட்டா போட்டுள்ளீர்கள்???
அடு்த்தது (ரஜினி) தலைவா, சூர்யாவின் ஜெய்பீம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்று அனைவரும் தங்களை சோதனை முயற்சிகளில் ஈடுபடுத்தி நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கின்றனர். ஆனால் நீங்கள் மட்டும் இன்னும் மருதாணி சிவப்பு சிவப்பு என்று ஆடிக்கொண்டிருந்தால் எப்படி தலைவா…?
முரட்டுக்காளை, பாட்ஷா, படையப்பா என்று பல படங்களில் நடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் ரஜினி.
ஆனால் தற்கால இயக்குனர்கள் படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இவரை வைத்து செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆம் ரஜினிக்கு இயக்குனர்களை தேர்வு செய்ய தெரியவில்லை, இயக்குனர்களின் முந்தைய படத்தை பார்த்து போய் தன் தலையை தண்டவாளத்தில் கொடுத்து கொள்கிறார் தலைவர்.
70 வயதில் தலைவர் ஆடுகிறார், பாடுகிறார், ஆக்ஷன் காட்சிகளில் தூள் பரப்புகிறார். இந்த வயதில் இவ்வளவு கடின உழைப்பை கொடுக்க தெரிந்த தலைவருக்கு அந்த உழைப்பை யாரை நம்பி கொடுப்பது என்று தெரியாததது தான் சோகத்தின் உச்சம்.
ஒன்றுமே இல்லாத இந்த கதைக்கு ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ், பாண்டியராஜன், ஜார்ஜ் மரியன், அபிமன்யு சிங் என்று ஒன்றறை டஜன் நட்சத்திரம் பட்டாளம் வேறு…
சிவா நீங்கள் தெலுங்கு சினிமாவிற்கு போய் விடுங்கள், தமிழ் சினிமா பாவம்
மொத்தத்தில் அண்ணாத்த ஒரு மக்காத குப்பை
அண்ணாத்தைக்கு விசிலின் மதிப்பெண்கள் 04/10
விமர்சனம் : பால கௌசல்யா, தென்காசி