திருச்செந்தூரின் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் கடற்கரை நுழைவுவாயிலில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கந்தசஷ்டி திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திருச்செந்தூர் கருதப்படுகிறது. இத்தகைய திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் சிறப்பான வழிபாடுகளுடன் துவங்கியது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுபாடுகளுடன் இந்த திருவிழா நடந்து வந்தது.
4 தேதி முதல் 8 வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை நடைபெற கூடிய கந்தசஷ்டி திருவிழாவான சூரசம்ஹாரம் மற்றும் நாளை நடைபெற இருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதில்லை என அறிவித்துள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடந்த ஆண்டு போல இந்தாண்டும் பக்தர்களின்றி கோவில் கடற்கரையில் நுழைவாயில் இன்று மாலை 4.மணிக்கு மேல் நடைபெறுகிறது.
இதனையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலின் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து யாகசாலை மண்டபத்தில் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. அதனையடுத்து அலங்கார தீபாராதனை நடந்து சப்பரத்தில் எழுந்தருளி 108 மகாதேவர் மண்டபம் வந்தடைகிறார். பின்னர் மதியம் 2 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற இருக்கின்றது.
இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதின மண்டபம் வந்தடைவார். அங்கு அவருக்கு 4 மணிக்கு தீபாராதனை நடைபெறும். இதனையடுத்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
செய்திகள்:மாரிராஜா,தூத்துக்குடி.